தமிழ் புத்தாண்டும் 60 ஆண்டு சுழற்சியும்

60 ஆண்டு சுழற்சியில் வரும் வேற்று மொழி பெயர்களையும், அதனுடன் சம்மந்தப்பட்ட வைதீக கதைகளும் இடைச்செருகல்கள். இந்த இடைச்செருகல்கள் 14ம் நூற்றாண்டில் நடந்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழர்களின் ஆண்டுமுறை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என தமிழறிஞர்கள் பலர் குறிப்பிடுகிறார்கள். ஆசீவகமும் ஐயனாரும் என்ற புத்தகத்தில் பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழர்கள் ஆண்டு முறை 5000 ஆண்டுகள் பழமையானது என நிறுவியிருக்கிறார்.



உதாரணமாக 2,300 ஆண்டுகளுக்கு முன் அலெக்சாண்டரின் படைத்தளபதியாக இருந்த மெகஸ்தனிஸ் எழுதிய நூலில், பாண்டியநாட்டில் 365 கிராமங்கள் இருந்தன என்றும், ஒவ்வொரு நாளும் ஒரு கிராமம் என்ற முறையில் அரண்மனைக்கு அன்றைக்குரிய தேவையான பொருள்கள் அனுப்பப்பட்டது, எனவே ஆண்டு முழுவதும் கருவூலம் நிரப்பியது என்றும் மெகஸ்தனிஸ் குறிப்பிடுகிறார். இதன் மூலம் ஆங்கில கிரிகோரியன் நாட்காட்டிக்கு முன்னமே நாம் ஆண்டுக்கு 365 நாட்கள் என அறிந்திருந்தது நிரூபணம்.

வைதீக மரபில் எவை எல்லாம் இழிவாகாக சொல்லப்படுகிறதோ அவற்றை எல்லாம் நாம் மீளாய்வு செய்யவேண்டும். ஏனென்றால் அவற்றுள் தமிழருடைய உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கும்.

அது என்ன 60 ஆண்டு சுழற்சி? 
சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 30 வருடங்களை எடுத்துக்கொள்கிற சனிக் கிரகமும் 12 வருடங்களை எடுத்துக்கொள்கிற வியாழன் கிரகமும் 60 வருடங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரே நிலைக்கு வருவதை இந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறை குறிக்கிறது.

இதை இந்துக்கள் மட்டுமல்ல, சீனர்களும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய்ப் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.  பருவகாலம் போல், இந்தச் சுழற்சி முறையிலும் வானிலைக் குறிப்புகள் பொதிந்திருக்கின்றன. மாலை  “வருஷப் பஞ்சம்” என்பது போல ஆண்டின் பெயரை வைத்து ஆண்டுப் பலன்களைச் சொல்பவர்கள், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடந்து வந்திருப்பவற்றை வைத்துப் பலன் சொல்லுகிறார்களா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தச் சுழற்சிகள், இன்னும் எத்தனை எத்தனை வட்டங்களுக்குள்ளோ, வெளியோ விரிந்து போகின்றன என்று பார்க்க வேண்டும். எல் நினோ(El Nino), லா நினா (La Nina) போன்ற பெருநீரோட்டங்கள் உலகளாவிய வானிலையைப் பாதிப்பது போல் இன்னும் என்னென்ன சுழற்சிகள் இருந்திருக்கின்றன என்று ஒப்பு நோக்க வேண்டும்.

தற்காலத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் சித்திரைத் திருநாளைக் கொண்டாடிவிட்டு, மேம்போக்காகப் பலன் பார்ப்பதோடு சரி.  சுழற்சி முறை, தொடர்ச்சி முறை, என்பதை எல்லாம் வேறுபடுத்திப் பார்ப்பதெல்லாம் மறந்தாகி விட்டது.  ஆங்கில ஆண்டு முறைதாம் நம் வாழ்க்கை என்றாகி விட்டதே.

புராணக் குப்பைகளுக்குள்ளும் வைரங்கள் ஏதாவது புதைந்திருக்கின்றனவா என்று பகுத்து அறிவோமே!

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ராஜா.M

Comments